திருவாரூர், செப். 15–
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவரான கேரளாவைச் சேர்ந்த சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி மருத்துவர் பலி
இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் சிந்து காய்ச்சல் காரணமாக, நேற்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் (பொறுப்பு) அமுதவடிவு கூறியதாவது:–
டைபாய்டு பாதிப்புக்கு உயிரிழந்த பயிற்சி மருத்துவர் சிந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு துறையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர்கள் இந்துவிற்கு மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென இந்து உடல்நலம் மோசம் அடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தார். ஆனால் இன்று அதிகாலை அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிபா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அமுதவடிவு தெரிவித்தார்.