செய்திகள்

திருவள்ளூர் வீரராகவ கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

Makkal Kural Official

திருவள்ளூர், மே 6–

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்கி குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்சவம் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில் உள்ள பாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 பேர் வந்துள்ளனர். இதையடுத்து வீரராகவ கோயில் குளத்தில் இன்று காலை 6 மணியளவில் சந்தியாவதனம் செய்வதற்காக குளத்தில் இறங்கிய போது ஒரு மாணவர் மூழ்கியுள்ளார். அந்த மாணவரைக் காப்பாற்ற முயன்ற போது மேலும் 2 மாணவர்களும் கால் வழுக்கியதில் குளத்தில் மூழ்கியுள்ளனர். அந்த வகையில் குன்றத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் (17), அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கட்ரமணன் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரராகவன் (24) ஆகிய 3 பேரும் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேத பாராயணம் செய்ய வந்த 3 மாணவர்கள் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவில் குளத்தில் உள்ள நீரை அடிக்கடி மாற்றாமல் பச்சை பாசி படிந்து யாரும் இறங்கி குளிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. அதேபோல் போதிய பாதுகாப்பு வசதி இல்லாதது மற்றும் குளத்தில் இறங்கி பக்தர்கள் குளிக்காதவாறு தடுப்புகள் அமைக்காததாலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *