திருவள்ளூர், ஜன. 8–
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து அம்மையங்களில் அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவற்கு என்னெற்ற சிறப்பு திட்டங்கள் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து இன்றும் அவ்வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கி வரும் அரசாக நம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டும் 512 நபர்கள் திருநங்கைகளாக இத்திட்டங்களின் மூலம் பயன்பட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டமாக, முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மது போதைக்கு அடிமையாகி தம் வாழ்ககையை இழக்கும் பல்வேறு நபர்களை மீட்டெடுத்து நல்வழிபடுத்தும் வகையில் நமது திருவள்ளுர், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மது போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மது பழக்கம் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களுக்கு அடிமையாக உள்ளவர்களை நல்வழிபடுத்தி சீரமைத்து ஓர் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கு தேவையான மருத்துவ வசதிகள் இம்மருத்துவ வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டு அதற்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக தனி பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளுர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), சந்திரன் (திருத்தணி), திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. அரசி ஸ்ரீ வத்சன், தலைமை குடிமை மருத்துவர் மரு.விஜயராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள், திருநங்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள ஆகியோர் கலந்து கொண்டனர்.