செய்திகள்

திருவள்ளூரில் 2934 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்

Spread the love

திருவள்ளூர், மார்ச். 1

திருவள்ளூரில் 2934 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வடக்குராஜ வீதி, சி.எஸ்.ஐ. கௌடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11-ம் வகுப்பு பயிலும், 23 பள்ளிகளைச் சேர்ந்த 2,934 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் மற்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் வழியில் நடக்கும், முதலமைச்சரின் அரசு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு இந்திய அளவில் மருத்துவம் மற்றும் பள்ளி கல்வித்துறையில் முதலிடம் வகிக்கிறது. மேலும், தமிழக அரசு பள்ளி-கல்வித் துறைக்கென ரூ. 34,181 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான பொருட்களான நோட்டு புத்தகம், புத்தகப் பை, காலணிகள், கிரேயான்ஸ் (வண்ண பென்சில்கள்), பேனா, பென்சில், நான்கு செட் சீருடைகள், விலையில்லா மிதிவண்டிகள், பஸ் பாஸ், அறிவுப்பசியை போக்கும் மடிக்கணினி உள்ளிட்டவைகள் வழங்கி வருகிறது.

அரசு பள்ளிகளில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு, வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறந்த முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் உயர்கல்வி செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சராசரியாக 49.3 சதவிகித மாணவர்கள் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்கின்றனர்.

முதலமைச்சர் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கு ஆணையிட்டு, ஒரு சில தினங்களில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்து மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பள்ளி மாணவர்களின் நலனுக்காக வழங்கப்படும் சீரிய திட்டமான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2011 ம் ஆண்டு முதல் இன்று வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 133 மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இக்கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் 7,577 மாணவர்களுக்கும், 11,477 மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 19,054 மாணவ-மாணவியர்கள் பயன் பெறவுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசுகையில், தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தேர்வினை முன்னிட்டு, கைப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மூழ்கி விடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ரவிக்குமார், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் திரளான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *