போஸ்டர் செய்தி

திருவள்ளூரில் பள்ளி வாகனங்களின் உறுதி தன்மை, பாதுகாப்பு வசதி

திருவள்ளூர், மே.19–
திருவள்ளுர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களின் உறுதிதன்மை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 2012–ன்படியும், போக்குவரத்து ஆணையர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவுரைகளின்படியும் ஆண்டுதோறும் மே மாதத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி வாகனங்களை தங்கள் பள்ளி எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அல்லது பகுதி அலுவலகத்தில் (மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்) ஆய்வுக்குட்படுத்தி சான்றுகள் பெறப்பட வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 204 பள்ளிகளின் 1061 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு சான்றுகள் வழங்கப்பட உள்ளன.
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 69 பள்ளிகளின் 259 வாகனங்களும், திருத்தணி பகுதி அலுவலகத்தில் 33 பள்ளிகளின் 189 வாகனங்களும், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 66 பள்ளிகளின் 343 வாகனங்களும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 28 பள்ளிகளின் 180 வாகனங்களும், கும்மிடிப்பூண்டி பகுதி அலுவலகத்தில் 8 பள்ளிகளின் 90 வாகனங்களும் 21–ந் தேதி அன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளி வாகனங்களை, உரிய முறையில் தயார்படுத்தி, தங்களுக்கு என குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் இடத்தில் தங்களது பள்ளி வாகனங்களை ஆய்வுக்குட்படுத்தி சான்றுகள் பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
31–க்குப் பிறகு
அனுமதியில்லை
சோதனைக்குட்படுத்தி சான்றுகள் பெறப்படாத பள்ளி வாகனங்கள், 31–ந் தேதிக்கு பின்னர் பொது சாலையிலோ அல்லது பள்ளியிலோ பயன்படுத்த அனுமதி இல்லை.
இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *