செய்திகள்

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

சென்னை, அக். 28–

திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிரான் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் ஓடி தப்பினார்.

கடந்த 18 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் வடக்கு மாட வீதியில் 80 வயது முதியவர் சுந்தரம் நடந்து சென்றார். செவித்திறனற்ற, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான சுந்தரத்தை , சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி தூக்கி வீசியது.

இதில் படுகாயமடைந்த முதியவர் மீட்கப்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது, முதியவரை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று நலம் விசாரித்தார். முதியவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தார். இந்நிலையில் 10 நாட்களாக சிகிச்சையில் இருந்த முதியவர் சுந்தரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *