செய்திகள்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா கோலாகலம்

Makkal Kural Official

லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

திருவனந்தபுரம், பிப். 26–

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா கடந்த 17ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா தொடங்கிய நாள் முதல் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக காலை முதலே ஏராளமான பெண்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் பொங்கலிட வசதியாக ஏராளமான மண்பானைகள் கோவில் அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தது. அதனை பெண்கள் போட்டி போட்டு வாங்கினார்கள்.

இதேபோல் பொங்கலிடும் இடத்தை பிடிப்பதற்கும் போட்டி இருந்தது. இரவிலேயே இடம் பிடித்து அங்கேயே பெண்கள் படுத்து தூங்கினர். கோவில் நடை திறந்ததும் அவர்கள் வழிபாடு செய்து பொங்கலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

முதலில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ‘பண்டார அடுப்பு’ என்றழைக்கப்படும் பொங்கல் அடுப்பை, நேற்று காலை 10.30 மணி அளவில் பக்தர்களின் சரண கோஷம் முழங்க கோவில் தலைமை அர்ச்சகர் கோசாலை விஷ்ணு வாசுதேவன் நம்பூதிரி பற்ற வைத்து பொங்கல் விழாவை தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பெண்கள் அனைவரும் பொங்கலிடத் தொடங்கினர்.

கோவில் வளாகத்தில் தொடங்கி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொங்கல் வைத்தனர்.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து திருவனந்த புரத்தின் முக்கிய சாலைகளில் வழிநெடுக பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

இதனால் திருவனந்தபுரம் மற்றும் ஆற்றுக்கால் பகுதிகளில் புகை மண்டலமாகவே காட்சி அளித்தது. திரும்பிய இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமே காணப்பட்டது.

அப்போது குட்டி விமானம் மூலம் பொங்கல் வழிபாடுகளில் அர்ச்சனை பூக்கள் தூவப்பட்டது. மேலும் ஆலய நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பகதர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சின்னதிரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களும் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

பொங்கல் விழாவையொட்டி திருவனந்தபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மதியம் 2.30 மணிக்கு நிவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடைந்தது.

கடந்த 1997ம் ஆண்டு 15 லட்சம் பெண்கள் மற்றும் 2009ம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *