கடலூர், பிப்.3-–
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 2023-–ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் தொடங்கியது.
திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 29-ந் தேதி யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதில் நேற்று முன்தினம் தேவநாதசுவாமி, தாயார் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசுவாமி யாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணியளவில் மங்கள வாத்தியம் முழங்க கும்பம் புறப்பாடு நடந்தது.
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கோட்டாட்சியர் அபிநயா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, ஜி.ஆர்.கே.குழும தலைவர் ஜி.ஆர். துரைராஜ் மற்றும் ஏராளமானோர் கோவிலின் மேல் பகுதியில் உள்ள கலசப் பகுதிக்கு சென்றனர்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க காலை 10 மணி அளவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் ஏராளமான பெண்கள் கும்மியடித்து மகிழ்ந்தனர். இதையடுத்து கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் மீதும், அருகில் உள்ள வீடுகள் மற்றும் ஹயக்ரீவர் மலை மீதும் நின்றும் தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் தேவநாதசுவாமிக்கு தங்கம் மற்றும் வைரத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.