மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம்: ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை
திருவண்ணாமலை, டிச. 3–
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த,ராஜ்குமார்,அவரது மனைவி மீனா, மகன் கௌதம், உறவினர்கள் மகா, இனியா, விநோதினி, ரம்யா உள்பட மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.
நேற்றிரவு நிலவரப்படி மேற்கண்ட 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அங்கிருந்து வந்த கள நிலவரங்கள் தெரிவித்தன. 3 குழந்தைகள் உள்பட 7 பேரின் உடல்களும் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதையுண்ட 7 பேரில் 4 பேரின் உடல்கள் மட்டுமே முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 3 பேரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வீட்டினுள்ளே சிக்கிக்கொண்ட 3 பேரின் உடல்களை முழுமையாக மீட்கக்கோரி அவர்களது உறவினர்களும் அப்பகுதி மக்களும் இன்று காலை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வ.உ.சி. நகர் மக்கள் மலை அடிவாரத்தில் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் மலைக்கு மேல் உள்ள சரிவில் சிக்கியவர்கள் இன்னும் மீட்கும் பணி தொடங்கவில்லை என்றும் புகார் கூறுகின்றனர். அதைக் கண்டித்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது தனது அக்காவை மீட்டுக் கொடுக்கும் படி சிறுமி ஒருவர் கதறி அழுத காட்சி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்த மீட்புப்பணி நேற்றிரவு மழை மற்றும் இருள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்புப்பணியில் இன்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி வாகனம் மூலம் மண்ணை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியிருக்கும் உடல் பாகங்களை மீட்க நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டன.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடே தயாராகிக் கொண்டிருக்கும் போது அந்த ஊர் இப்போது மீட்க முடியாத ஒருசோகத்தில் மூழ்கித் தத்தளித்து வருகிறது.
வல்லுநர்கள் எச்சரிக்கை
திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்து பலியான மேலும் 2 பேர் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி ஓய்வு பெற்ற வல்லுனர்கள் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வந்தனர். அவர்கள் மீட்பு பணிக்கு ஆலோசனைகளை வழங்கினர்.மேலும் மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், திருவண்ணாமலை மகாதீப மலையில் தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும். லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும். மண் சரிவு குறித்து அறிக்கை தயார் செய்துள்ளோம். இதனை அரசிடம் சமர்ப்பிப்போம். இது குறித்த முழு விவரங்களை அரசு வெளியிடும் என்றனர்.