செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 2 ஆம் நாள்: வெள்ளி விமானங்களில் எழுந்தருளி காட்சி தந்த பஞ்ச மூர்த்திகள்

திருவண்ணாமலை, நவ. 19–

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 2 ஆம் நாள் இரவு திருவுலாவில், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 17 ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் (அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர்) 11 நாட்கள் தீப திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பர்.

அந்த அடிப்படையில் இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

26 ந்தேதி மகா தீபம்

மேலும் 26ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்படும். அதனைத்தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

இதனை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *