அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
திருவண்ணாமலை, பிப்.16–
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை மூலமாக 6 இடங்களில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
திருவண்ணாமலை என்பது ஆன்மீக தளமாகும். அருணாச்சலேசுவரர் திருக்கோயிலை சுற்றியுள்ள கிரிவலப்பாதையின் மொத்தம் நீளம் 14 கி.மீட்டர் ஆகும். கிரிவலப்பாதையில் மாதந்தோறும் 20 முதல் 25 இலட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு ஏறக்குறைய 45 முதல் 50 இலட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். எனவே வருகை தரும் பக்தர்களுக்கு கிரிவலப்பாதையில் தேவையான குடிநீர் வசதி செய்து தருவது என்பது இன்றியமையாதது ஆகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன் நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவியேற்று, பக்தர்களுக்கு குடிநீர் வசதியினை ஏற்படுத்தும் வகையில் 14 கி.மீட்டர் நீளமுள்ள கிரிவலப்பாதையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்தவகையில் ஏற்கனவே குபேரலிங்கம், அகஸ்தியர் கோவில், அபயமண்டபம், கோசாலை, இலுப்பமர ஓடை, பழனியாண்டவர் கோவில், நிருதி லிங்கம் அருகில், செங்கம் சாலை சந்திப்பு ஆகிய 8 இடங்களில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.
மேலும், நாளுக்கு நாள் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதால் அவர்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது அண்ணா நுழைவு வாயில் அருகில், பஞ்சமுக தரிசனம், அபயமண்டபம் மற்றும் அரசு கலை கல்லூரி, செங்கம் சாலை சந்திப்பு அருகில், பழைய அரசு மருத்துவமனை அருகில் என புதியதாக 6 நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இந்தியன் ஆயில் கழகம், ஆர்.ஆர்.இன்ப்ரா மற்றும் ஐ.வி.எல்.ஆர் இன்ப்ரா கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவைகளின் பங்களிப்புடன் பக்தர்களின் பயன்பாட்டிற்கு இன்றையதினம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறந்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்பி, நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் கே.ஜி.சத்தியபிரகாஷ், தி.மலை வட்ட கண்காணிப்புபொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி, கோட்டப்பொறியாளர் பி.ஞானவேலு, உதவி கோட்டப்பொறியாளர் கே.அன்பரசு, சசிகுமார் கோட்டாட்சியர் (பொறுப்பு) செந்தில்குமார் தாசில்தார் கே.துரைராஜ் கிராம நிர்வாக அலுவலர் எம்.மாதவன் மற்றும் இந்தியன் ஆயில் நிர்வாகத்தினர் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.