திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரம் அருகே பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளிய பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலையில் சந்திரசேகரர் மாலையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.