செய்திகள்

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பின் கிரிவலம் செல்ல அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை, மார்ச் 15–

நாளை மறுநாள் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ் பெற்றது. ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக சென்று கிரிவலம் செல்கிறார்கள். அன்றை தினம் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சி அளிக்கும்.

இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அனுமதி

இதுதொடர்பாக திருவண்ணாமலைகலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தமாதம் (பங்குனி) பவுர்ணமி தினங்களான வருகிற 17 மற்றும் 18- ஆம் தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முடக்கவும் அணிந்து வரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் அனுமதி கிடைத்துள்ளதால் தங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே வருகிற பவுர்ணமி கிரிவல நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.