லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
மாலையில் மலை உச்சியில் மகாதீபம்; பொதுமக்கள் மலைஏற தடை
திருவண்ணாமலை,டிச. 13–
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக ஜோதி வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.
பரணி தீபம்
10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இன்று அதிகாலை 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா “என்று விண்ணதிர கோஷம் எழுப்பி வணங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர்.மகாதேவன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மற்றும் கோவில் அறங்காவலர் குழுவைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.
2668 அடி மலை உச்சியில்…
திருவிழாவின் சிகர விழாவாக மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கு தேவையான அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த 6.5 அடி உயரமுள்ள தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று கொட்டும் மழையிலும் மலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மலைப்பகுதியின் ஈரப்பதம், பாறை உருளும் தன்மை, மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் நடக்கும் பாதையில் வழுக்கும் என்பதால் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டுமே மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் காட்சியளித்ததும் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தைப் பார்க்கலாம். மகா தீபத்தை தரிசனம் செய்வதற்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிலில் நடைபெறும் விழாவினை நேரடியாக வெளிப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு ஒளிபரப்ப 20 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகள் சார்பில் பல முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகரம் தயார் நிலையில் உள்ளது.
தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாடவீதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மகா தீபத்தை காண பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க அவர்கள் கையில், பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில்
16 ஆயிரம் போலீசார்
மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள் முன்னெச்சரியாக நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலிருந்து 2,700 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது.