தி.மு.க. எம்.எல்.ஏ. சின்னதுரைக்கும் பிடிவாரண்ட்
அரியலூர், ஆக. 2–
மயிலாடுதுறை கோர்ட் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மற்றொரு வழக்கில் அரியலூர் கோர்ட் தொல்.திருமாவளவன் எம்.பி.க்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடந்தது. இதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீதும் வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கான குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அரியலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆஜராகாமல் இருந்துள்ளார்.இதனால் அவர் மீது அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாராணைக்கு ஆஜராகாத கந்தர்வக் கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னதுரைக்கும் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.