செய்திகள்

திருமழிசையில் 25 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்: அதிகாரிகளுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை

Spread the love

311 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்தில் 12 ஆயிரம் குடியிருப்புகள்

திருமழிசையில் 25 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்:

அதிகாரிகளுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை

 

சென்னை, மே 22

திருமழிசை துணைக்கோள் நகரத்தில் 25 ஏக்கர் பரப்பில் அமைய உள்ள, மேற்கு மாவட்ட பேருந்துகளுக்கான புதிய பேருந்து முனைய வடிவமைப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் பண்டிகைகளின் போது அதிகளவில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ், மேற்கு மாவட்ட பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையம், ஆந்திரா நோக்கி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன.

மாதவரம் பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு செயல் படத் தொடங்கிவிட்ட நிலையில் அங்கிருந்தே ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையத்துக்கான பணிகள் கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமையும் துணைக்கோள் நகரத்தில் 25 ஏக்கர் பரப்பில் புதிய பேருந்து முனையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

நவீன வசதிகளுடன்…

திருமழிசையில் 311 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் இந்த துணைக்கோள் நகரத்தில், 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. தற்போது தற்காலிக சந்தை செயல்படும் இந்த இடத்தில், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான வடிவமைப்பு குறித்து நேற்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வடிவமைப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்ட சி.ஆர்.நாராயணராவ், பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேருந்து முனையம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத் தில், வீட்டுவசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *