திருமலை, நவ. 22–
திருமலை திருப்பதி நகரை முன்மாதிரி நகரமாக மாற்றுவதற்கான அறிவிப்புகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நாட்டின் பணக்கார கோவில்களில் ஒன்றான ஏழுமலையான் கோவிலுக்கு, பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையையும் செலுத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை மலைப்பாதை வழியாக நடந்து சென்றும், தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி திருமலையை மாடல் நகரமாக மாற்ற தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் திருமலையை முன்மாதிரி நகரமாக மாற்றுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி உலகப் புகழ்பெற்ற திருமலையை முன்மாதிரி நகரமாக மாற்ற திட்டமிட்ட வடிவமைப்புகள் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான தொலைநோக்கு ஆவணம் அவசரமாகத் தேவைப்படுவதால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரமைப்புப் பிரிவு அமைக்கப்படவுள்ளது. மேலும் திருமலையில் பக்தர்களுக்கு சாதகமாக நடைபாதைகளை மாற்றுவது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேம்பட்ட அடிப்படை வசதிகள்
பக்தர்களின் வசதிக்காக ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சில பழைய குடிசை வீடுகளுடன், பாலாஜி ஆர்டிசி பேருந்து நிலையமும் புதிதாக கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 25 ஆண்டுகளின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு ஆவணம் ஒன்றை உருவாக்கி அதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, நகரமைப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஓய்வுபெற்ற நகரமைப்பு அலுவலர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போதுள்ள 150 குடில் வீடுகளுக்கு பெயர் சூட்டவும், திருமலையில் ஆன்மீக சூழலை மேம்படுத்த நன்கொடையாளர்களை தேர்வு செய்து குடில்களின் பெயர்களை மாற்றவும் திருப்பதி தேவஸ்தான ஆட்சிக்குழு முடிவு செய்துள்ளது. திருமலையில் குவிந்துள்ள கழிவுகள் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் செயல் அதிகாரி ஷியாமளா ராவ் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரின் வருடாந்திர பிரம்மோத்சவத்தை நவம்பர் 28 முதல் டிசம்பர் 6 வரை நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் உத்தரவிட்டுள்ளார்.