பிரகாசம், ஜூலை 11–
திருமண ஒப்பந்த பேருந்து 30 அடி ஆழ கால்வாயில் கவிழ்ந்ததில், திருமணத்திற்குச் சென்ற 7 பேர் பலியானார்கள்.
ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்திற்குட்பட்ட போதலி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காக்கிநாடாவில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசு பேருந்தை முன்பதிவு செய்து எடுத்துச் சென்றனர். இந்த பேருந்தில் 45க்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இவர்கள் தர்ஷி – போதிலி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது , பேருந்து மோதாமல் இருக்க ஓட்டுநர் முயற்சி செய்தார்.
கால்வாயில் கவிழ்ந்தது
அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த 30 அடி ஆழ கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இதனால் பேருந்திலிருந்தவர்கள் அலறியடித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து உடனே வந்த போலிசார் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் அஜீஸ், அப்துல் ஹானி, ஷேக் ரமீஸ், முல்லா நூர்ஜஹான் முல்லா ஜானி பேகம் , ஷேக் ஷபீனா மற்றும் ஷேக் ஹினா என்ற சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18க்கும் மேற்பட்டோர் படுயாகங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரின் நிலை கவலைக்கிடாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.