செய்திகள்

திருமணத்திற்கு 3 மணி நேரம் முன் பாம்பு கடித்து மணமகன் மரணம்

Makkal Kural Official

லக்னோ, ஜூலை 14–

திருமணத்திற்கு 3 மணி நேரம் முன்பு பாம்பு கடித்ததில் மணமகன் மரணம் அடைந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது புலந்த்ஷர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது அகர்பஸ் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் பிரவேஷ்குமார் (வயது 26). திருமண வயதை எட்டிய இவருக்கு கடந்த சில மாதங்களாக மணமகள் தேடி வந்த நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் மணமகள் நிச்சயம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, பிரவேஷ்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க 3 மணி நேரம் இருந்த நிலையில், மணமகன் பிரவேஷ்குமார் இயற்கை உபாதை கழிப்பதற்காக அவரது கிராமத்தில் இருந்த புதர் அருகே சென்றுள்ளார்.

திருமண பணியில் அனைவரும் பரபரப்பாக இருந்த சூழலில், மணமகன் பிரவேஷ்குமாரை நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை. இதனால், அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அவரைத் தேடியுள்ளனர். அப்போது, அருகில் உள்ள புதர் ஒன்றில் பிரவேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

மாப்பிள்ளை பலி

இதைக்கண்ட குடும்பத்தினரும், உறவினர்களும் பதற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து, பிரவேஷ்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இதனால், திருமண வீடு சோகமாக மாறியது. மணமகன் பிரவேஷ்குமார் பாம்பு கடித்து உயிரிழந்த தகவல் அறிந்த மணமகள் குடும்பத்தினரும் பெரும் சோகம் அடைந்தனர். திருமணம் நடைபெறுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக, மணமகன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை மணமகன் கிராமத்திலும், மணமகள் கிராமத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

பிரவேஷ்குமார் உயிரிழந்த புலந்த்ஷர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதத்தில் 7 பேர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாவட்ட மூத்த மருத்துவர், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பாம்புகடிகளுக்கு உரிய மருந்துகளும் கைவசம் இருக்கிறது என்றும், மழைக்காலங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *