சிறுகதை

திருமணச் சேவை | ராஜா செல்லமுத்து

சாமிநாதன் கைகளில் இப்போது நூற்றுக்கணக்கான மணப்பெண்கள் புகைப்படம், அவர்களைப் பற்றிய விபரம் இருந்தன. மற்றும் தஞ்சாவூர் பகுதியில் பிரபலமான திருமண சேவை செய்பவர் என்ற பெயரும் இருந்தது.

அவருடைய செல்போன் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இடைவிடாது யார் யாரோ பெண்கள் கேட்பதும் மாப்பிள்ளை கேட்பதுமாய் இருப்பார்கள். எப்போதும் சாமிநாதன் விவரங்களை சொல்வதும் போவதுமாக பரபரப்பாகவே இருப்பார்.

அவர் திருமணம் முடித்து வைத்த ஆட்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வெற்றி பெற்றது.

சாமிநாதன் திருமணம் செய்து வைத்தால் குடிசை கோபுரமாகும். அந்த அளவிற்கு கைராசி மிக்கவர் என்று அந்தப் பகுதியில் பெயர் பெற்றார்.

சுவாமிநாதன் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பெண், மாப்பிள்ளை பார்க்காமல் ஒட்டு மொத்தமான திருமணச் சேவையாளராக விளங்கினார். சமுதாய சீர்திருத்தத்தையும் திருமண தகவல் மையத்தில் கொண்டுவந்தார். சமூக சீர்திருத்த வேலைபோல் அதை சுவாமிநாதன் செய்தார்.

அதாவது திருமண மையத்தில் பதிவு செய்ய வரும் ஒரு சமூகத்தை சேர்ந்த மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இன்னொரு சமூகத்தை சேர்ந்த மாப்பிள்ளை பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முறையும் அவர் ஏற்படுத்தினார்.

இங்க பாருங்க உங்க பொண்ணு நல்லா படிச்சு இருக்காங்க. நல்ல மாப்பிள்ளை கிடைச்சதுனா, உங்க குடும்பம் நல்லா இருக்கும். நம்ம சாதி சனத்த சேர்ந்தவங்க அப்படின்னு நீங்க நினைக்காம எந்த சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சொல்லுங்க. உங்க பொண்ணுக்கு ஏத்த வரன் எல்லா சமூகத்திலும் கிடைக்கும். நம்ம சாதியில் தான் மாப்பிள்ளை வேணும்; நம்ம சாதியில் தான் பொண்ணு வேணும்னு நினைக்காதீங்க; படிச்சவங்க நல்லவங்க எந்த சாதியா இருந்தாலும் கல்யாணம் பண்ணி வையுங்க . சாதிசனம் அப்படிங்கிறது எல்லாம் ஒன்னும் இல்லைங்க . சும்மா பணம் காசு வந்தா எல்லாம் சரியாப் போயிடும். அதனால உங்க பொண்ணுடைய சுய விவரம் பார்த்தேன். படிச்சிருக்காங்க; ஜாதி அது இதுன்னு வெறும் கவுரவம் பார்க்காம எந்த ஜாதியில் படிச்ச நல்ல மாப்பிள்ளை இருந்தாலும் உடனே கட்டி கொடுக்க. அது தான் நல்லது என்று சுவாமிநாதன் தன் மையத்தில் ஒரு சீர்திருத்தம் செய்து கொண்டிருந்தார். அவர் வெறுமனே திருமணம் செய்து வைக்கும் ஒரு புரோக்கராக இல்லாமல் இந்த சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதியையும் வேரறுத்துக் கொண்டிருந்தார். அதன்படியே எத்தனையோ கலப்புத் திருமணங்களையும் சாமிநாதன் செய்து வைத்திருக்கிறார்.

அதனால் அவருக்கு அந்தப் பகுதியில் சீர்திருத்தவாதி என்ற ஒரு பெயரும் கிடைத்தது. இப்படி போய்க்கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், ஒரு நாள் வீட்டில் உள்ள பலா மரத்தின் கீழே அமர்ந்து கொண்டு தான் எப்படி இந்த தொழிலுக்கு வந்தேன் என்பதை விலாவாரியாக விளக்கினார் சுவாமிநாதன்.

இங்க பாருங்க; நான் பணம் சம்பாதிப்பதற்காக இந்த தொழிலை ஏற்றுக் கொள்ளல. என்னோட பையனுக்கு பொண்ணு பார்க்கப் போய் அதில் ஏற்பட்ட அனுபவத்தாலதான் நானும் இதுக்கு வந்துட்டேன் .

என்னைய தரகர் என்று சொல்வதைவிட, ஒரு சமூக அமைப்பாளர்ன்னு தான் சொல்லுவேன்.

ஏன்னா தரகர் அப்படிங்கற பேர்ல எத்தனையோ பேரு நிறைய பணம் வசூல் பண்ணிட்டு மாப்பிள்ளையும் காட்டாம பொண்ணையும் காட்டாம ரொம்ப தப்பான வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. என்னோட பையனுக்கு பொண்ணு பாக்கணும் அப்படின்னு ஒரு லட்சம் வரைக்கும் செலவு பண்ணி இருக்கேன். ஆனா ஒரு பொண்ணு கூட சரியா அமையல. பணத்தை வாங்கின தரகருக ரொம்பவே என்னை ஏமாத்திட்டாங்க. மனசு வெறுத்துப் போச்சு. ஒரு பொண்ணு பாக்குறதுக்கு இவ்வளவு பணம் செலவழிக்கணுமான்னு யோசிச்சு பார்த்தேன். பணம் வாங்குறவங்க நேர்மையாக நடந்துகொள்ள மாட்டேங்கிறாங்க . அப்படின்னு எனக்கு கோபம் வந்துச்சு. அதிலிருந்து தரகர் கிட்ட பணம் கொடுத்து ஏமாற கூடாதுன்னு நினைச்சு, நானே என் பையனுக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சேன்.

அப்படி பொண்ணு தேடும் போது என் பையனுக்கு சரியாக வராத நல்ல பொண்ணுங்கள என்னுடைய பையன் சரியில்லைன்னாலோ இல்ல. அந்த பொண்ணு என் பையனை வேண்டான்னு சொன்னாலோ உங்களுக்கு நல்ல மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணித் தரேன்னு சொல்லி அவங்களுக்கு மாப்பிள்ளையை என்னுடைய பையனே தேர்ந்தெடுத்து கொடுத்தான்.

அது அந்த பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு ரொம்ப சந்தோசத்தை ஏற்படுத்த, இத ஏன் நம்ம ஒரு சேவையாக செய்யக் கூடாது அப்படின்னு நெனைச்சேன். இப்ப வரைக்கும் யார்கிட்டயும் எந்த பணமும் வாங்கனது இல்லை. இதை ஒரு சேவையாக செஞ்சுக்கிட்டு இருக்கேன். நல்ல பொண்ணு நல்ல பையன் எந்த சமூகத்துல ஜாதியில் இருந்தாலும் அவங்களை சேத்து வைக்கிற ஒரு பாலமாக இருக்கிறேன் என்று சுவாமிநாதன் தன் விளக்கத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் செல்போன் சினுங்கியது .

சார் நீங்க சொன்ன அந்த பொண்ணு எங்க ஜாதி இல்லை என்றாலும் கூட நல்ல படிச்சிருக்காங்க . நான் அந்தப் பொண்ண கல்யாணம் பண்றதுக்கு விருப்பப்படுகிறேன். அவங்க கிட்ட நான் பேச முடியுமா சார் என்று ஒருவர் எதிர்திசையில் கேட்டார்.

ஓ… தாராளமா பேசுங்க. உங்கள பத்தி அந்த பொண்ணு வீட்டிலும் சொல்லியிருக்கேன். அவங்களுக்கும் ஜாதி அது இதுன்னு பெரிய உடன்பாடு இல்ல. கண்டிப்பா உங்க பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை நன்றாக அமையும். நான் உடனே அந்தப் பொண்ணு வீட்டு நம்பர உங்களுக்கு அனுப்புறேன். நீங்க பேசலாம்” என்று சுவாமிநாதன் தன் செல்போனில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பேசியைதைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் சாமிநாதனை ஆவலாக பார்த்தார்கள்.

அப்போது அவரைச் சுற்றி இருந்த மரங்களில் இருந்து பூக்கள் பூமாரி பெய்துகொண்டிருந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *