செய்திகள்

திருமங்கலம் தொகுதி மக்களுக்காக எங்கள் தந்தையை அர்ப்பணித்து விட்டோம்

மதுரை, மார்ச் 19–

எங்கள் தந்தையை திருமங்கலம் மக்களுக்காக அர்ப்பணித்து விட்டோம் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மகள் பிரியதர்சினி பிரச்சாரம் செய்தார்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர், பேரையூர், கள்ளிகுடி, மைக்குடி ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை ஆதரித்து அவரது மகள் யு.பிரியதர்சினி பிரச்சாரம் செய்து பேசியதாவது:

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் நல்லாசியுடன் எனது தந்தை இங்கு போட்டியிட்டார். அவரை 24,000 வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் அளித்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றியுள்ளார். 24 மணி நேரமும் தொகுதி மக்களின் நலனைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார். எனது குடும்பத்தில் அனைவரும் திருமங்கலம் தொகுதி மக்களுக்காக எனது தந்தையை அர்ப்பணித்து விட்டோம். திருமங்கலம் தொகுதியில் அனைத்து கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள்நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது 33 கோடியில் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது திருமங்கலம் தொகுதி உச்சப்பட்டியில் துணைக்கோள் நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது அதே போல் திருமங்கலம் அரசு உறுப்புக் கல்லூரி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருமங்கலம் தொகுதியில் உள்ள 1,10,000 குடும்பங்களுக்கு கொரோனா காலத்தில் அரிசி தொகுப்பு,காய்கறி தொகுப்பு, கோதுமை தொகுப்பு, கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதி வேட்பாளராக எனது தந்தையை முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்துள்ளனர். இந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆண்டுகாலம் செய்யவேண்டிய திட்டப்பணிகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார். அண்ணா தி.மு.க. சார்பில் 163 தேர்தல் அறிக்கைகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிக்கை எல்லாம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தும் அறிக்கையாகும். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாள் ஆக உயர்த்தப்படும் என்றும், ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள், இல்லத்தரசிகள் மாதம்தோறும் 1,500 ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது நிச்சயம் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும்.

ஆகவே உங்கள் நலனே தன்னலம் என்று உங்களுக்காக இரவு பகல் பாராது தன்னை அர்ப்பணித்து உழைத்துவரும் எனது தந்தைக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்கு அளித்து மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடியாரை அரியணையில் அமர்த்தும் வண்ணம் திருமங்கலம் தொகுதி தான் அண்ணா தி.மு.க.விற்கு அதிகமான வாக்குகளை பெற்றுத்தந்த தொகுதி என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *