செய்திகள்

திருப்பூரில் ரெயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து நகை, பணம் கொள்ளை: வடமாநில ஆசாமிகள் 5 பேர் கைது

சென்னை, ஆக. 31–

திருப்பூரில் ரெயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் மற்றும் கூல் டிரிங்க்ஸ் கொடுத்து பணம், நகைகளை அபேஸ் செய்த வடமாநில கொள்ளையர்கள் 5 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல மாதங்களாக வடமாநில பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பலின் அட்டகாசம் தொடர்ந்து நடந்து வந்தது. திருப்பூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கும் வடமாநில ரயில் பயணிகள், வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், மார்க்கெட், காதர்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடந்து வந்தன. வடமாநிலத்தைச் சேர்ந்த பயணிகளை குறி வைத்து அவர்களிடம் அறிமுகமாகி பேச்சு கொடுத்து நட்பாக பழகி மயக்க மருந்து தடவிய கிரீம் பிஸ்கட்டுகள், டீ, குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மயங்கியவுடன் செல்போன், பணம், உடைமைகள் போன்றவற்றை திருடிச் செல்வதாக புகார்கள் வந்து குவிந்தன.

ரயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில் டிஐஜி அபிஷேக் திக்சித், எஸ்பி உமா மேற்பார்வையில், டிஎஸ்பி யாஸ்மின், போத்தனூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரியாசாய்ஸ்ரீ தலைமையில் எஸ்ஐக்கள் அண்ணாதுரை, கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் ராஜ்குமார், குணசேகரன், நாகரஞ்சினி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. திருப்பூர் ரயில்வே பாதுகாப்புப்படை உதவியுடன் தனிப்படையினர் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனையடுத்து திருப்பூர் ரயில் நிலைய பார்சல் ஆபீஸ் மற்றும் ஆர்எம்எஸ் ஆபிஸ் அருகில் சுற்றித்திரிந்த சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் மயக்க மருந்து கொடுத்து பயணகளிடம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள், பீகார் மாநிலம், ஆரயா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சல்மான் (25), மனுவர் ஆலம் (25), முகமது ஆசாத் (32), முஹம்மது மஹ்மூத் ஆலம் (31). அப்துல்லா (31) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் திருப்பூர் குன்னங்கரை அருகில் உள்ள மில்ஸ்டாப் பகுதி, சூரியா காலனியில் தங்கி அருகில் உள்ள பணியன் கம்பெனிகளில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், ரொக்கம் ரூ. 10 ஆயிரம், மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், அதே மயக்க மாத்திரைகளை பொடியாக்கிய பாக்கெட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

மயக்க மருந்து கும்பலை கைது செய்த தனிப்படையினரை ஏடிஜிபி வனிதா வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *