திருப்பூர், ஜூலை 1–
திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் காவிலிபாளையம்புதூர் பகுதியில் கட்டிடப் பணி செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (28) மற்றும் சரவணபவன்( 28) ஆகிய இருவரும் திருப்பூரில் தங்கி பணி செய்து வந்தனர். இவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அன்றாடம் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து டீ குடிக்கச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் வழக்கம்போல் டீ குடிக்கச் சென்றுவிட்டு அறைக்கு திரும்பிவரும் போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரயில்வே போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.