சிறுகதை

திருப்புமுனை |கரூர்.அ.செல்வராஜ்

நடைபயிற்சி நண்பர்கள் பாலசுப்பிரமணியன், ராம்குமார், ஜெயச்சந்திரன் ஆகிய மூவரும் தங்களது காலை நேர நடை பயிற்சியை முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நடந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் அவர்களின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோ டிரைவர் ஒரு வீட்டு விலாசம் பற்றி விசாரித்தார். ஆட்டோ டிரைவரிடம் ராம்குமார் விவரம் சொல்லி அனுப்பி வைத்தார்.

வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் நடை பயிற்சி நண்பர்களில் ஒருவரான பாலசுப்பிரமணியன் தன் நண்பன் ஜெயச்சந்திரனிடம் பேச ஆரம்பித்தார்.

‘ஜெயா! உங்க மூத்த மருமகள் அரசாங்க வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்கி சந்தோஷமா குடும்பம் நடத்துறதா சொன்னீங்க. இளைய மருமகள் இப்ப எப்படி இருக்கிறா? சண்டை, சச்சரவு ஏதும் இல்லியே’’ என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லும் விதமாக ஜெயச்சந்திரன் பேசினார்.

‘பாலு சார், என் மூத்த மருமகளுக்குக் கல்யாணம் நடந்து அஞ்சு வருஷமா குழந்தை இல்லே. இப்பதான் அவள் கர்ப்பம் தரிச்சிருக்கா, படிப்பிலே கெட்டிக்காரியான அவளுக்கு மேற்படிப்பு படிக்க ஆசை. மேற்படிப்பு படிக்கவும் போட்டித் தேர்வு எழுதறதுக்குப் பயிற்சி எடுத்து பாஸ் பண்ணவும் நான் வழிகாட்டினேன், பண உதவியும் செஞ்சேன். இதெல்லாம் என் சின்ன மருமகளுக்குச் சுத்தமாப் பிடிக்கவே இல்லே. வீட்டிலே சண்டை, சச்சரவு பண்ணிகிட்டே இருந்தா; இன்னமும் பண்ணிகிட்டேதான் இருக்கிறா’ என்றார்.

ஜெயச்சந்திரன் பேச்சைக் கேட்ட பாலசுப்பிரமணியன் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

‘ஜெயா, நீங்க பெரிய மருமகளுக்குச் செய்த உதவிகளை சின்ன மருமகளுக்கு செய்யாதது ஏன்? இது பாரபட்சம் ஆச்சே’ என்றார். அதற்கு ஜெயச்சந்திரன் பாலு சார், சின்ன மருமகள் சித்ரா பி.ஏ. வரை தான் படிச்சிருக்கா. அதற்கு அப்புறம் கல்யாணம் ஆயிருச்சு. கல்யாணம் நடந்த ஒரு வருஷத்திலேயே பெண் குழந்தையும் பிறந்திருச்சு. சர்வீஸ் கமிஷன் பரீட்சைகளை எழுதுறதுக்கு முயற்சி செய்யலே. டீச்சர் வேலைக்கு பி.எட் படிப்பும் படிக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா. நான் என்ன செய்யட்டும்?’ அவள் புருஷனும் மாமியாரும் கூடிப் பலதடவை எடுத்துச் சொல்லி அலுத்துப் போயிட்டாங்க’ என்றார்.

அதற்குப் பதில் சொல்லும் விதமாக பாலசுப்பிரமணியன் ,

‘ஜெயா, உங்க சின்ன மருமகளுக்கு மேற்படிப்பிலே ஆசை இல்லீன்னீங்க, சரி அது இருக்கட்டும். என் மனைவி எம்.எஸ்.டபிள்யூ. அதாவது மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் படிச்சுட்டு ஒரு காலேஜிலே வேலையிலே இருக்கிறாள், அவளை உங்க சின்ன மருமகளுக்கு ஆலோசனை சொல்ல வைக்க ஏற்பாடு பண்ணறேன். உங்க சின்ன மருமகளுக்கு சுயதொழில் செய்யிறதிலே. விருப்பமிருந்தா அதற்கும் ஏற்பாடு செய்யச் சொல்றேன். வர்ற ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் 6 மணிக்கு உங்க சின்ன மருமகளையும் உங்க சின்ன மகனையும் எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க. இந்தாங்க இந்த அட்ரஸை வச்சுக்குங்க’ என்று கொடுத்தார். ஒரு வாரம் கடந்தது.

நண்பர் மனைவியின் வழிகாட்டுதலினால் ஜெயச்சந்திரனின் சின்ன மருமகள் சித்ரா தனக்குத் தெரிந்த தையல் கலையினால் ‘சித்ரா டைலர்ஸ்’ என்ற பெயரில் பெண்களுக்கான கடையைச் சொந்தமாக ஆரம்பித்தாள்.

அவள் தனது குடும்ப வாழ்க்கையில் ஒரு ‘திருப்புமுனை’யைக் கண்டாள்.

இப்போது சித்ரா தனது சுயதொழிலில் வெற்றிநடை போடத் தொடங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *