செய்திகள்

திருப்பி அனுப்பப்பட்ட உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த வாக்காளர்கள்: மாலை 6 மணிக்கு வந்து வாக்களிக்க வாய்ப்பு

சென்னை, ஏப்.6-

வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த வாக்காளர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், மீண்டும் அவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா பீதிக்கு மத்தியில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலின்போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை அந்தந்த மாவட்டத்துக்கு சுகாதாரத்துறை அனுப்பி உள்ளது.

வாக்குசாவடி நுழைவு வாயலில் தெர்மல் ஸ்கேனர் (உடல் வெப்ப பரிசோதனை கருவி), சானிடைசர் (கிருமி நாசினி), கையுறை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் வாக்காளர்கள் வரிசையில் நின்றனர்.

தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்து வாக்காளர்களையும் பரிசோதித்த பிறகே அவர்கள் வாக்களிக்க உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பரிசோதனை செய்யும்போது வாக்காளருக்கு உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த நேரத்தில் அவருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. அந்த வாக்காளருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருந்த வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *