சிறுகதை

திருப்பம்..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஓட்டலுக்குள் நுழைந்த முரளியால் சாப்பிடவே முடியவில்லை .அவன் ஆர்டர் செய்தது. நல்ல அசைவ உணவு தான் என்றாலும் அவனால் அதை ஒப்பிச் சாப்பிட முடியவில்லை. அவன் முன்னால் மீன், கறி, பிரியாணி என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அவனால் அதை எடுத்து சாப்பிடுவதற்கு என்னவோ பாேல இருந்தது.

அவ்வளவு பசியாக இருந்தது. சாப்பிடுவதற்குத் தானே இந்த ஓட்டலுக்குள் நுழைந்தோம் ? ஏன் நம்மால் சாப்பிட முடியவில்லை. மனம் கிடந்து அடித்துக் கொண்டது.

எழுந்து போய் விடலாமா?

என்று கூட நினைத்தான் முரளி. இந்த விஷயம் நம்மைச் சாப்பிட விடாமல் செய்கிறதே? எதற்காக நான் சாப்பிடாமல் இருக்கிறேன்? என்றெல்லாம் அவனுக்குள் ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டு இருந்தது .மற்றவர்களெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது என்னால் மட்டும் ஏன் சாப்பிட முடியவில்லை. அவனுக்கு முன்னால் இருந்த உணவுத் தட்டை கவனித்தானோ இல்லையோ? அந்த ஓட்டலையை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். .மற்றவர்கள் எல்லாம் எதையும் லட்சியம் செய்யாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே? இவர்கள் எல்லாம் பரிமாறும் இலையை எடுக்கும் மனிதர்களைப் பற்றி யோசிப்பார்களா? மாட்டார்களா? அவர்களும் மனிதர்கள் தானே ? என்று கொஞ்ச நேரம் நினைப்பார்களா ?

என்று யோசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான் முரளி. கேட்டு விடலாமா ? இல்லை ஏதாவது தவறாக நினைப்பாரா? என்று அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் துளையிட்டுத் துளைத்துக் கொண்டிருந்தன.

சரி கேட்டுத் தான் பார்க்கலாம் என்று நினைத்த முரளி கையில் வாளியை வைத்துக்கொண்டு சாப்பிட்டவர்களின் இலைகளையெல்லாம் எடுத்து போட்டுக் கொண்டிருந்த அந்த பெரியவரைப் கூப்பிட்டான் முரளி.

இரண்டு டேபிளுக்கு முன்னால் இருந்த அந்தப் பெரியவரை

“ஐயா” என்று அழைத்தான் முரளி. அதுவரை அவரை அப்படி யாரும் அழைத்ததில்லை .ஏன் ஒரு மனிதனாக கூட அவர்கள் நினைத்ததில்லை .

யார் நம்மைக் கூப்பிடுவது ? என்று கையில் வாளியோடு திரும்பி பார்த்தார் அந்தப் பெரியவர்

“ஐயா இங்கே வாங்க ” என்று கூப்பிட்டான் முரளி. சற்று முற்றும் பார்த்த அந்தப் பெரியவர்

நம்மையேன் இவர் கூப்பிடுகிறார்? எதற்காக நம்மை இவர் கூப்பிட வேண்டும் ?

என்று ஒரு விதமான பயம் ,நடுக்கம் கலந்தே முரளியிடம் போனார் அந்தப் பெரியவர் .

“ஐயா” என்று மெல்லிய குரலில் முரளியிடம் கேட்டார்

“நீங்க ஏன் இலை எடுக்குறீங்க?’’ என்று முரளி கேட்க, அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஹோட்டலை சுற்றித் திரும்பி பார்த்தார் அந்தப் பெரியவர்.

பேசுவதால் நம்மை வேலை விட்டுத் தூக்கி

விடுவார்களோ ? என்ற பயம் கூட அந்தப் பெரியவரிடம் இருந்தது. பதில் சொல்ல முடியாமல் தவித்தார் .

“எதுக்காக நீங்க ஹோட்டல்ல இலை எடுத்துக்கிட்டு இருக்கீங்க? வேற வேலை எதுவும் கிடைக்கலையா? நீங்க யார் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? என்ற முரளியின் கேள்விகளால் விழித்தார், அந்தப் பெரியவர்.

ஆர்டர் செய்யப்பட்ட உணவை அவனால் சாப்பிடவே முடியவில்லை. தன் இருக்கையை விட்டு எழுந்த முரளி அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து இழுத்து வந்து

‘ இங்க உட்காருங்க. சாப்பிடுங்க”

என்று தான் ஆர்டர் செய்த உணவை சாப்பிடச் சொன்னான் முரளி

” தம்பி எனக்கு இதெல்லாம் வேண்டாம் .நீங்க யாரு? எதுக்காக இப்படிச் செய்றீங்க? நீங்க இப்படி பண்றதுனால எனக்கு இந்த வேலை போயிடும் “

என்று கொஞ்சம் சத்தமாகப் பேசினார் .அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஓட்டல் ஊழியர்கள் முரளியிடம் ஓடி வந்தார்கள்.

” என்ன சார் இங்க பிரச்சனை?

என்று கேட்டார்கள்.

” இல்ல சார் இவரப் பாத்தா நல்ல மனிதராக இருக்கார் அவரோட சட்டை, பேண்ட், அவரோட நடவடிக்கை எல்லாமே வேற மாதிரி இருக்குது. ஏன் இவர் இந்த வேலை செஞ்சுட்டு இருக்காரு ?அப்படின்னு எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அதுதான் நான் அவரச் கூப்பிட்டு கேட்டேன்”

“சார் இவர் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

என்று ஒருவர் முரளியிடம் கேட்க

“தெரியல” என்று உதடு பிதுக்கினான் முரளி

“சரி நீங்க சாப்பிடுங்க”

” இல்ல எனக்கு தெரிஞ்சாதான் நான் சாப்பிடுவேன்”

என்று பிடிவாதமாக இருந்தான் முரளி

” இல்ல சார் .நீங்க சாப்பிடுங்க நான் சொல்றேன்”

என்று மறுபடியும் ஒருவர் வற்புறுத்த , வேறு வழியின்றி தான் ஆர்டர் செய்த உணவை அரையும் குறையுமாகச் சாப்பிட்டான் முரளி. அந்த பெரியவரை அதற்கு பிறகு காணவில்லை

” இவர் எங்கே போய்ட்டார் ?

என்று சற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான் முரளி.அவர் அங்கு இல்லவே இல்லை.

” எங்க போயிருப்பார்? “

என்றுகேட்க

“நீங்க பில் கொடுத்துட்டு போங்க அப்புறம் பேசிக்கலாம் “

என்று அங்கு பணிபுரியும் ஆட்கள் வற்புறுத்த, வேறு வழி இன்றி செய்வதறியாமல் தன் பில்லைக் கொடுக்கப் போனான் முரளி. அங்கே பார்த்தவனுக்கு தலையே சுற்றியது . இலை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரியவர், அந்த முதலாளி இருக்கையில் அமர்ந்திருந்தார்.

” என்ன தம்பி என்னாச்சு? நான் இலை எடுத்திட்டு இருந்தத பாத்து அதிர்ச்சியாகிட்டிங்களா? இப்ப முதலாளி சீட்ல ஒக்காந்து இருக்கேன் எப்பிடின்னு நினைக்கிறீங்களா ? தம்பி நான் இலை எடுத்தேன்ல அங்கிருந்துதான் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். ஒரு ஹோட்டல்ல சிப்பந்தியா சேந்து இலை எடுத்தேன். என்னோட லைப் அங்கிருந்து தான் ஆரம்பிச்சது. அத என்னைக்கும் மறக்கக்கூடாது அப்படிங்கறதுக்காகத்தான் இந்த இலைய நான் எடுக்கிறேன். இன்னைக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்து, பத்து இருக்கு. ஆனா, எந்த இடத்தில இருந்து நான் வாழ்க்கை ஆரம்பிச்சேனோ? அந்த இடத்துல அப்படியே அதை மறக்காமல் இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால தான் எப்பவும் இந்த இலை எடுக்கிறத செஞ்சுகிட்டு இருக்கேன். அது உங்களுக்கு வேணா தப்பா தெரியலாம். ஏன் இவ்வளவு உயரத்தில இருந்து மறுபடியும் கீழ இறங்கி வர நினைக்கிறேன்னு. நாம பழச எப்பவும் மறக்க கூடாது தம்பி. அப்பதான் நமக்கு தலைக்கனம், திமிரு, நம்மகிட்ட பணம் இருக்கு. நாம பெரிய ஆளு அப்பிடிங்கிற மமதை வராது என்று அந்தப் பெரியவர் சொல்ல, நெடுஞ்சாண்கிடையாக அந்தப் பெரியவரின் காலில் விழுந்தான் முரளி.

“தம்பி எந்திரிங்க. நீங்களும் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் பழச எப்பவும் மறக்காதீங்க. அதுதான் நம்ம வாழ்க்கைக்கும் இந்த சமூகத்துக்கும் நல்லது ” என்று அந்தப் பெரியவர் சொல்ல முரளிக்கும் அந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் என்னவோ போலானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *