சிறுகதை

திருப்பம் – ஆவடி ரமேஷ்குமார்

பிராட்வே செல்வதற்காக ஆவடி பஸ்டான்டை நோக்கி போய்க்கொண்டிருந்தேன்.

பஸ்டான்டிற்கு முன்பு உள்ள பிள்ளையார் கோயில் வாசலில் இரு கால்களும் இல்லாமல் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரனை பார்த்ததும் திடுக்கிட்டேன்.

இவனை….இவனை…நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

எங்கே? ஆங்…என் ஸ்டேஷனரி கடையின் முன் வந்து நின்று அடிக்கடி பிச்சை கேட்டிருக்கிறான்.

அப்போது இவனுக்கு இரு கால்களும் நன்றாகத்தான் இருந்தது. இப்போது?!

அவன் முன்னே போய் நின்றேன்.

அவனையே உற்றுப் பார்த்தேன்.ஆம்! இவனே தான்…நான் கூட இவனிடம், ‘ கையும் காலும் உனக்கு நல்லாத்தானே இருக்கு.உழைச்சு பிழைக்கலாமில்லே.ஏன் பிச்சை எடுக்கிறே?’ என்று கேட்டு அடிக்கடி திட்டியிருக்கிறேன்.

இப்போது பாவமாயிருக்கிறது.

கால்களை எப்படி இழந்தான்?

கேள்வி என் மண்டைக்குள் குடைய ஆரம்பித்தது.

மெல்ல அவனுக்கு அருகில் சென்றேன்.

அவன் தன் முன்னே தரையில்

விரித்துப்போட்டிருந்த கருப்பு

போர்வையின் மேல் ஏராளமான சில்லறைக் காசுகளும் பத்து ரூபாய், இருபது ரூபாய் தாள்களும் குவிந்து கிடந்தன.

” ஏப்பா, ரெண்டு வருஷத்துக்கு முன்ன நீ என் கடைக்கு அடிக்கடி வருவியே…அப்ப உனக்கு ரெண்டு கால்களும்

நல்லாத்தானே இருந்தது…இப்ப எப்படி இந்த மாதிரி ஆச்சு?”

அவனிடம் கேட்டேன்.

அவன் தலையை தூக்கி என்னை உற்றுப்பார்த்து விட்டு, ” உங்களை மாதிரி நிறைய பேர் எனக்கு பிச்சை போடாம உழைச்சுப் பிழைக்க சொன்னதால…வருமானம் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன்.சரி செத்துப்போயிடலாம்னு ரயில்வே தண்டவாளத்துல தலையை கொடுக்க போனேன். அப்போது திடீர்னு ஒருத்தர் வந்து என்னை தடுத்திட்டார்.ரயிலோ பக்கத்துல வந்திடுச்சு.தடுத்தவரை தள்ளிவிட்டுட்டு மறுபடியும் தண்டவாளத்துல விழப்போனேன்.அதுக்குள்ளே

என்னை தடுத்தவர் சுதாரிச்சிட்டு என் கையைப்பிடிச்சு இழுக்க, நான் விழ, என் கால்கள் ரெண்டும் தண்டவாளத்து மேல இருந்தது. என் கால்களை நான் இழுக்கிறதுக்குள்ள ரயில் அதன் மேலே ஏறிடுச்சு சார்.அப்புறம் ஆஸ்பத்திரிக்கு போயி குணமாக ஒரு வருஷமாயிடுச்சு.

கடந்த ஒரு வருஷமா இந்த எடத்துல தான் பிச்சை எடுத்திட்டிருக்கேன்.சில்லறை

நிறைய கிடைக்குது சார்.என்னை சாவிலிருந்து காப்பாத்தினவரு இப்ப என்

நண்பர் ஆயிட்டாரு.அவருக்கு கூட நிறைய பணம் கடன் கொடுத்திருக்கேன்”.

இப்போது இவனுக்கு நான் பிச்சை போடுவதா வேண்டாமா என்று குழம்பிப்போன நான்,

இப்போதும் அவனுக்குப் பிச்சை போடாமல்

” சரிப்பா.நல்லாயிரு!” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *