அமராவதி, செப். 28–
திருப்பதி லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக, விசாரிக்க கோரியிருந்த மனுக்களை திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருமலையில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் விசாரணை
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி பிரசாதமான லட்டு மற்றும் நெய்யின் தரத்தில் இனி எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு சார்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரியிருந்த மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணை செப்டம்பர் 30 ந்தேதி நடைபெறவுள்ளது.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பியும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.