கோவை, செப். 11–
திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் மறவாமல் அங்கிருந்து வாங்கி வருவது லட்டு பிரசாதம் ஆகும். உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வது வழக்கம். இந்தநிலையில் திருப்பதி லட்டு விற்பனைக்கு புதிய விதிமுறைகளை தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது.
லட்டு விற்பனை விதிகளில் உள்ள மாற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி
, “சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு வேண்டுமானால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரிசன டோக்கனைக் காட்ட வேண்டும். இவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும். மேலும் வேண்டுமானால், லட்டு ஒன்றுக்கு 50 ரூபாய் செலுத்தி தேவைக்கேற்ப அவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.
சாமி தரிசனம் செய்யாதவர்கள் லட்டு வாங்கவேண்டுமானால், அவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை. அதுவும் ஒரு ஆதார் அட்டைக்கு இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு மாதத்தில் எத்தனை ஆதார் அட்டைகளுக்கு லட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கண்காணிக்கப்படும்” என்றார்.