சென்னை, செப். 19–
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றதற்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து வருகிறது. குறிப்பாக திருப்பதி கோயில் விவகாரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசன முறைக்கேட்டில் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா உட்பட ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விலங்கு கொழுப்பா?
இது தொடர்பாக என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஜூன் மாதம் ஆந்திராவில் ஜனசேனா மற்றும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெகன் மோகன் ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய அரசின் கீழ் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் பிரசாதமும், திருப்பதி கோயிலையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்தும், புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியுள்ளனர். இருப்பினும், நாங்கள் இப்போது தூய நெய்யைப் பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுகிறோம்” எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மூத்த தலைவரும், எம்.பி-யுமான ஒய்.வி சுப்பா ரெட்டி, “சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளார். திருமலை பிரசாதம் குறித்த அவரது கருத்துகள் மிகவும் தவறானது. யாரும் இது போன்ற வார்த்தைகளை பேசவோ, குற்றச்சாட்டுகளை கூறவோ முன்வர மாட்டார்கள்.
அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு நாயுடு எந்த எல்லைக்கும் தள்ளப்படுவார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும் எனது குடும்பத்தினரும் திருமலை பிரசாதம் குறித்து சர்வ வல்லவரான அந்த ஏழுமலையான் முன் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் இதைச் செய்ய தயாராக இருக்கிறாரா?” எனக் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.