திருமலை, செப். 19–
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது தெரியவந்துள்ளது.
திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்து கொன்றது. இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினர் சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை அருகே இரும்பு கூண்டுகளை வைத்தனர். இதில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கின. மேலும் 200 கேமராக்களை பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கம்பு வழங்கப்பட்டது. கூண்டில் சிக்கிய சிறுத்தைகளை வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் அடைத்தனர். சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை அறிய சிறுத்தைகளின் முடி ரத்தம் உள்ளிட்டவைகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 2 சிறுத்தைகளின் டி என் ஏ பரிசோதனை அறிக்கை வந்தது. அறிக்கையில் 2 சிறுத்தைகளும் சிறுமையை கொல்லவில்லை என தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தைகளை விஜயவாடா உயிரியல் பூங்கா மற்றும் வன சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர். மற்ற சிறுத்தைகளின் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை விரைவில் வர உள்ளது. அதற்குப் பிறகு சிறுமியை கொன்ற சிறுத்தை எது என தெரியவரும்.
இந்நிலையில் நேற்று இரவு மலைப்பாதையின் 15-வது திருப்பத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனை வாகனங்களில் சென்ற பக்தர்கள் பார்த்தனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். சேஷாசல வனப்பகுதியில் உள்ள ஒரு சில சிறுத்தைகள் திருப்பதி மலைபாதை அருகே வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.