செய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை: பக்தர்களுக்கு தேவஸ்தானம் கட்டுப்பாடு

Makkal Kural Official

திருப்பதி, பிப். 20–

திருப்பதி திருமலை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணிக்கே நடைபாதை மூடப்படும் என்று பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபிரி வழியாக நடை பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் அலிபிரியில் இருந்து நடைபாதையின் 7வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடைபாதையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

இரவு 9.30 க்கு நடைபாதை அடைப்பு

அதன்படி அலிபிரியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் தனியாகவோ, குழுவாகவோ அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்பிறகு பக்தர்கள் குழுக்களாக கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 70 முதல் 100 பக்தர்கள் இருக்கவேண்டும் என்பதை விஜிலென்ஸ் குழு கண்காணித்து வருகிறது. மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிற்பகல் முதல் அனுமதி இல்லை. அலிபிரி நடைபாதை இரவு 10 மணிக்கு மூடப்பட்ட நிலையில் இனி இரவு 9.30 மணிக்கே மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு இதே திருமலை மலைப்பாதையில் சிறுத்தை தாக்குதலில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அதற்கு முன்பு, மற்றொரு குழந்தை படுகாயமடைந்தது. எனவே, நடைபாதையில் குழந்தைகளின் அனுமதி குறித்து சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *