செய்திகள்

திருப்பதி உண்டியலில் ரூ.3.20 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை

Makkal Kural Official

திருப்பதி, ஏப். 27–

திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.3.20 கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளன.

திருப்பதியில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலமாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.

இதனிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் தொடர்ச்சியாக செலுத்தி வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி வரை ரூ.3.20 கோடி 2 ஆயிரம் நோட்டுகள் உண்டியலில் செலுத்தப்பட்டன.அவற்றை மாற்ற அனுமதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியது. இதையடுத்து 5 தவணையாக பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.

அதன்படி ரூ.3.20 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திருப்பதி தேவஸ்தானம் மாற்றியுள்ளது.

இதேபோல் பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளும் திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்டன. ரூ.500 கோடி வரை செலுத்தப்பட்ட இந்த பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.

ஆதலால் அவை இன்னமும் தேவஸ்தான கிடங்கில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.திருப்பதியில் நேற்று 57,909 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ.3.81 கோடி வசூல் ஆனது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *