திருப்பதி, ஜன. 19–
திருப்பதியில் ரூ.300 போலி டிக்கெட்டுகளை போட்டோஷாப் மூலம் தயார் செய்து, டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் பிடிபட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் லட்சுமிபதி என்ற ஊழியர் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் மறைமுகமாக கூட்டு சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானுபிரகாஷ் ஆகியோர் பக்தர்கள் கொண்டு செல்லும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை, போலியாக போட்டோஷாப் மூலம் தயார் செய்துள்ளனர். மேலும் திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு, டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பிடிபட்ட 5 பேர் கைது
அவ்வாறு கடந்த 14ஆம் தேதி பக்தர்கள் சிலரிடம் இவர்கள் கைவரிசை காட்டியபோது, சந்தேகத்தின் அடிப்படையில் பக்தர்களின் டிக்கெட்டுகளை வாங்கி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் இருப்பது போலி டிக்கெட்டுகள் என்பதும், அந்த டிக்கெட்டுகளை மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானு பிரகாஷ் ஆகியோர் கொடுத்து அனுப்பியதும், அவ்வாறு வருபவர்களின் டிக்கெட்டுகளை லட்சுமிபதி ஸ்கேன் செய்யாமல் அனுப்பியதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்த கும்பலை, திருமலை திருப்பதி தேவஸ்தான போலீசாரிடம் விஜிலென்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.