செய்திகள்

திருநெல்வேலியில் 4 நீர்த்தேக்கங்களிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Spread the love

சென்னை, ஆக. 27–

திருநெல்வேலி மாவட்டத்தில் 4 நீர்த்தேக்கங்களிலிருந்து நாளை முதல் 3 மாதத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 8225 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடனாநதி, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு 8225.46 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைய நாளை (28ந் தேதி) முதல் 25.11.2019 வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களிலுள்ள நேரடி பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *