திருநெல்வேலி, டிச. 20–
திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் மாயாண்டி (வயது 38) என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். அந்த கும்பல் மாயாண்டியை துரத்தி சென்றது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பழிக்குப்பழியாக நடந்த கொலை என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பாக இருக்கும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்ததையும் மீறி, இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் கூறுகையில், நீதிமன்றத்திற்கு முன்பு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். சிசிடிவி காட்சிகளை கொண்டும், அங்கிருந்த தடயங்களை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக வழக்கறிஞர்கள் வைத்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். நீதிமன்ற முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் இளைஞர் கொலை செய்து தப்பி சென்றவர்களில் ஒருவரை பிடித்துள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக தப்பி சென்றவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.