தாம்பரம், ஏப். 2–-
பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் திருக்கோவிலின் பங்குனி பெருவிழா பிரம்மோற்சவ திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த திருக்கோவிலில் பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஸ்தலாதிபதி அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் பங்குனி பெருவிழா பிரம்மோற்சவம் நடைபெறும்.
இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொங்கி நடைபெற்றது வருகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வீதி உலா நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் நான்கு மாட வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தேரோட்ட ஏற்பாடுகளை கோவிலின் சார்பில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் பொ. இலஷ்மிகாந்த பாரதிதாசன், தக்கார் சி. நித்யா, காஞ்சிபுரம் இணை ஆணையர் இரா. வான்மதி, திருக்கோயில் செயல் அலுவலர் கு. குமரவேல், ந. தியாகராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.