செய்திகள்

திருநங்கைகளின் இலவச பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: ஸ்டாலின்

சென்னை, மே.8–

பெண்களைப் போலவே திருநங்கைகளும் பேருந்தில் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

இந்த உத்தரவு உடனடியாக இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது. ‘மகளிருக்கு கட்டணமில்லை’ என்ற அறிவிப்பு ஸ்டிக்கருடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், இந்துஜா ரகுநாதன் என்பவர், ‘பெண்களுடன் திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்’ என்று ஸ்டாலினை டேக் செய்து ட்விட்டரில் கோரிக்கை வைத்துப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், ‘மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தி.மு.க. அரசின் வழக்கம். தாங்கள் அதனைக் கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *