செய்திகள்

திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில்: 25 உறுப்பினர்கள் விரைவில் நியமனம்

புதுடெல்லி, ஆக.23-–

இந்தியாவில் திருநங்கைகளுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019–-ன் கீழ் திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலை மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தலைமையில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசிதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கவுன்சில், திருநங்கைகளின் சமத்துவம் மற்றும் முழு பங்களிப்பை அடைய வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், திருநங்கைகளுக்கான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல், அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும் மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல், திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்தல், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட பிற செயல்பாடுகளை செய்தல் ஆகிய 5 முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்.

இந்த கவுன்சிலில் பல்வேறு துறைகளை சேர்ந்த 10 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலும் 5 மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் சுழற்சி அடிப்படையில் ஆணைய உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன்படி முதல்கட்டமாக ஆந்திரா, ஒடிசா, திரிபுரா, குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இது தவிர திருநங்கை சமூகத்தில் இருந்து 5 உறுப்பினர்களும், அரசு சாரா நிறுவனங்களில் இருந்து 5 நிபுணர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *