செய்திகள்

திருத்தணி வீரகநல்லூர் கிராமத்தில் விரைவில் துணை மின் நிலையம்

சென்னை, பிப். 12

திருத்தணி வீரகநல்லூர் கிராமத்தில் விரைவில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி அறிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது திருத்தணி தொகுதி உறுப்பினர் பி.எம். நரசிம்மன் கேள்வி எழுப்பினார்.

திருத்தணி தொகுதிக்குட்பட்ட வீரகநல்லூர் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பதில் அளிக்கையில், திருத்தணி தொகுதிக்குட்பட்ட வீரகநல்லூர் கிராமத்தில் ஒரு புதிய துணை மின் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த துணை மின் நிலையம் அமைக்க பாறை புறம்போக்கு நிலம் வீரகநல்லூர் கிராமத்தில் கண்டறியப்பட்டு, வருவாய்த் துறையினரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, துணை மின் நிலையம் அமைக்கும் பணி துவங்கப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து குன்னூர் தொகுதி உறுப்பினர் ராமு கேள்வி ஒன்றை எழுப்பினார். குன்னூர் தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி வட்டத்தை பிரித்து புதிதாக கீழ் கோத்தகிரி வட்டம் உருவாக்க அரசு ஆவன செய்யுமா? என்றார்.

அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளிக்கையில், நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி உள்வட்டத்தில், மக்கள் தொகை 58 ஆயிரத்து 874 ஆகும். அதன் நிலப்பரப்பு 11 ஆயிரத்து 586 ஹெக்டேர் ஆகும் அதில் பெரும்பாலான நிலங்கள் வனம் மற்றும் எஸ்டேட் நிலங்களாக உள்ளன. கோத்தகிரியிலிருந்து கீழ் கோத்தகிரி உள்வட்டத்தின் தொலைவு சுமார் 15 கி.மீ. சுற்றளவை கொண்டுள்ளது. மேலும் புதிய வட்டம் உருவாக்குதல் தொடர்பான அரசாணை நிபந்தனைகள் பூர்த்தியாகவில்லை. எனவே கீழ் கோத்தகிரியில் புதிய வட்டம் அமைப்பதற்கான சாத்திய கூறு இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *