திருத்தணி, ஜூலை 26–
திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 39 நாட்களில் ரூ.1 கோடியே 20 லட்சம் பணம், 786 கிராம் தங்கத்தை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் திருக்கோயில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த திருக்கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை போன்றவற்றை செலுத்துகின்றனர்.
ரூ.1 கோடியே 20 லட்சம்
இந்நிலையில் திருத்தணி முருகன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. திருத்தணி கோவில் துணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில், திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் பங்கேற்றனர். அதன்படி 39 நாட்களில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 11,895 ரொக்கம், 786 கிராம் தங்கம், 11,705 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.