சிறுகதை

திருட்டு – ஆவடி ரமேஷ்குமார்

“என்ன கணேஷ் சொல்ற… உங்க கடையில திருட்டா? அதுக்கு உன்னை வேலையை விட்டு உன் முதலாளி நிறுத்திட்டாரா?” தாய் மரகதம் தன் 19 வயது மகனைப் பார்த்துக் கேட்டாள்.

“ஆமாம்மா. முதலாளி இல்லாத நேரம் பாத்து யாரோ பசங்க பத்து பேர் ஒரே சமயத்துல எங்க கடைக்கு ஜூஸ் குடிக்க வந்தாங்க. நேத்து தான் எங்க முதலாளி பத்து பெரிய புது சில்வர் டம்ளர்களைப் புது மாடல்னு ஆசையா வாங்கி வச்சிருந்தார். அதுல தான் எல்லோருக்கும் ஜூஸ் போட்டுக் கொடுத்தேன். அவங்க போனப்புறம் தான் அந்தப் பத்து புது டம்ளர்களும் காணோம்கிற விசயம் எனக்கு தெரிஞ்சது. முதலாளிகிட்ட சொன்னதுக்கு, ‘பத்து டம்ளர்கள் திருட்டு போற அளவுக்கு நீ என்னத்தை பண்ணிட்டிருந்த? நீ இந்த வேலைக்கு லாயக் இல்லே. வேலையை விட்டுப்போடா’ னுசொல்லி, ஓங்கி என் கன்னத்துல அறஞ்சு அனுப்பிட்டாரும்மா” இரவு முழுவதும் தாயும் மகனும் புலம்பித் தீர்த்தார்கள்.

கணேஷின் அப்பா இல்லை. இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது.

மறுநாள் காலை மணி பத்து.

“அம்மா….. என்னை மறுபடியும் வேலைக்கு வரச்சொல்லி எங்க முதலாளி இப்ப எனக்கு போன் பண்ணினார்ம்மா. நான் வேலைக்குப் போயிட்டு வர்றேம்மா” கணேஷ் புறப்பட்டுப் போய் விட்டான்.

முதலாளியின் இந்த திடீர் மனமாற்றம் புரியாமல் குழம்பிப் போனாள் மரகதம்.

அதன் பின்னணி நிலவரம் இதோ: ‘கௌரிப்பேட்டை காவல் நிலையத்தில் எட்டு வாக்கி டாக்கிகள் திருட்டு’ என்று பேப்பரில் வந்த செய்தியை இன்று காலையில் படித்து விட்டு இப்படி தனக்குள் பேசிக் கொண்டார் சூப்பர் கூல்டிரிங்ஸ் கடையின் முதலாளி.

‘அடக்கண்றாவியே..! காவல் நிலையத்திலேயே திருட்டா? போலீஸ்காரர்கள் யாரையுமே சஸ்பென்ட் பண்ணலையா? அடப்பாவமே… கவனக் குறைவால் டம்ளர்கள் திருட்டுப்போனதுக்கு நான் கணேஷை தப்பாக தண்டித்துவிட்டேனே..!

சாரிடா கணேஷ்! இதோ உடனே உன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *