சிறுகதை

திருட்டுப் பழக்கம்- ராஜா செல்லமுத்து

செல்வாவின் வாசிப்பு இலக்கியம், ஆன்மீகம், அரசியல், கதை, கவிதை, கட்டுரை என்று நீளும்.

அவன் எந்தத் துறையைத் தொட்டு கட்டுரை எழுதினாலும், கவிதை எழுதினாலும் அதன் அடி ஆழம் வரை சென்று முத்து குளிக்காமல் அவன் விடுவதில்லை . அவனிடம் அறிவின் ஆற்றல் ஆழப் பதிந்திருந்தது.

அதனால் அவன் கட்டுரையை வாசிப்பதற்கு கவிதையை நேசிப்பதற்கு ஒரு வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தான்.

அவன் எழுதும் கவிதைகளும் கட்டுரைகளும் கதைகளும் எதுவாக இருந்தாலும் பின்னூட்டம் இடும் சமூக வலைதள நண்பர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படைப்பை பாராட்டும் அன்பர்களும் நிறைய இருந்தார்கள் .

அதனால் அவனின் செருக்கு கொஞ்சம் முறுக்காகவே இருந்தது.

ஆனால் செல்வாவிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அது நல்ல நூல்களை திருடுவது ; அது தவறில்லை என்று அவன் மனதில் வைத்துக் கொண்டு எங்காவது நல்ல புத்தகங்களை படித்தால் அதை திருடிக் கொண்டு வரும் பழக்கமுடையவனாக இருந்தான் செல்வா.

அது அவன் அளவில் அது திருட்டு என்று சொல்வதை விட கொணர்தல் என்று இலக்கியப் படுத்திக் கொள்வான்.

அவனுக்கு பெரிய உறுத்தலாக இல்லாமல் இருந்தது. ஆனால் தான் பணிபுரியும் அலுவலகத்தில் விரிந்து பறந்த நூலகம் ஒன்றும் இருந்தது .

அந்த நூலகத்தில் படித்துவிட்டு சில புத்தகங்களை தொடர்ந்து திருடி வந்து விடுவான் செல்வா ..

அந்த அலுவலக முதலாளி புத்தகங்களை தேடிப் பார்த்து காணவில்லை என்றால் அது செல்வாதான் எடுத்துப் போயிருப்பான் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

அடைந்து கிடக்கும் அறிவை விருத்தி செய்வதற்கு அவன் எடுத்துப் போய் இருக்கிறான் என்று அவர் தெரியாமல் இருந்து கொள்வார். அந்த நிறுவனத்தின் முதலாளி .

எதுவும் தன்னை கேட்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த செல்வாவிற்கு ஒரு உறுத்தல் ஏற்பட்டது.

ஒரு நாள் அந்த முதலாளியை பார்த்து சொல்லியே விட்டான்

சார் என்ன நீங்க மன்னிக்கணும் என்றதும்

எதுவும் தெரியாது போல் சிரித்த முதலாளி

என்ன? என்று சிரித்துக் கொண்டே கேட்டார் .

நம்ம அலுவலகத்தில் இருக்கிற எத்தனையோ புத்தகங்களை நான் திருடிட்டு வந்திருக்கேன். என் மனசுல உறுத்தல் இருக்கு. அதனால இன்னைக்கு நம்ம அலுவலகத்தில் இருந்து எடுத்துட்டு வந்த அத்தனை புத்தகத்தையும் கொண்டு வந்து இருக்கேன். இத நான் உங்ககிட்ட மனப்பூர்வமா ஒப்படைகிறேன் என்னை மன்னிச்சிடுங்க என்றான் செல்வா.

அதை சற்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத முதலாளி அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களை தன் பக்கம் இழுத்தார். தான் தவறை உணர்ந்து கொண்டதாக நினைத்துக் கொண்டான் செல்வா.

சரி நான் வெளியில் கிளம்புறேன் என்று செல்வா சொன்னதும்

ஒரு நிமிஷம் என்றார் முதலாளி

எதற்கு திட்ட போகிறாரோ என்னவோ? என்று பயந்து கொண்டு இருந்த செல்வாவை எதிரே இருக்கும் நாற்காலியில் அமரச் சொன்னார் .

கொஞ்சம் பயத்துடனே அவர் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து அதன் தலைப்பை வாசித்தார். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார் .ஒவ்வொரு புத்தகமும் மணிமணியான கருத்துக்களை சொல்லும் அரிதான புத்தகங்கள் என்பது முதலாளிக்குத் தெரியும்.

ஆனால் அந்த அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் அந்தப் புத்தகத்தை பேருக்குக் கூட தொட்டுப் பார்க்க மாட்டார்கள் . ஆனால் செல்வா அதை எடுத்துக் கொண்டு போய் எத்தனை முறை படித்திருப்பான் என்பது அவருக்கு நன்றாக விளங்கும் .

அதனால் இந்த புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் காட்சி பொருளாக இருப்பதை விட ஒரு மனிதனின் அறிவின் விருத்திக்கு பயன்படுவது தான் புத்தகம் பிறந்ததற்கான பயன் என்பதை நினைத்த முதலாளி தன் சட்டை பையில் இருந்த விலை உயர்ந்த போனாவை எடுத்து நிதானமாக திறந்தார்.

தன் மோதிரத்தை குவிய புத்தகத்தின் முதல் பக்கத்தில் அன்புடன் பழனிச்சாமி என்று முதலாளியின் கையெழுத்திட்டு ஒவ்வொரு புத்தகமாக செல்வாவின் பக்கம் தள்ளினார் .

இதைச் சற்றும் எதிர்பாராத செல்வா.

சார் எனக்கு எதுக்கு சார் வேண்டாமே? என்றான்.

இல்ல இந்தப் புத்தகங்கள் இருந்தால் இன்னும் 200 வருஷம் ஆனாலும் இது யாரும் எடுத்து வாசிக்கவோ இதில் இருக்கிற கருத்துக்களும் தெரியும்னு ஆசையோ .படமாட்டாங்க, ஏன்னா யாருக்கு இங்கே புத்தக வாசிக்கிற பொறுமையோ அதை பற்றிய சிந்தனையோ இல்ல. நீங்க நல்ல ரசிகன் . நல்ல படைப்பாளி புத்தகங்களை நேசிக்கிற ஒரு மனிதன். இது உங்ககிட்ட இருக்கிறது தான் சிறப்பு

என்று செல்வா கொண்டு வந்த புத்தகத்தில் கையெழுத்திட்டத்தை மட்டும் இல்லாமல் அலுவலக ஊழியரை அழைத்து இன்னும் அந்த அலுவலக நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் இருக்கிறது. அதில் நல்ல புத்தகங்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு அன்புடன் பழனிச்சாமி என்று முதலாளி கையாப்பமிட்டு அத்தனை புத்தகங்களையும் செல்வாவிடம் ஒப்படைத்தார் .

செய்த தவறிலும் ஒரு நன்மை பிறந்திருக்கிறது

என்று நினைத்த செல்வா படாரென முதலாளியின் கையைப் பிடித்துக் கொண்டு ‘

‘சார் என்னை மன்னிக்கணும். நான் உங்களுக்கு சிரமத்தை கொடுத்துட்டேன்’’என்றான்.

இந்த புத்தகம் பிறந்ததற்கான பலன இனிதான் அது அனுபவிக்கப் போகுதுன்னு நினைக்கிறேன் . நீங்க தாராளமா வாசிங்க. எனக்கு தேவைப்பட்டா உங்ககிட்ட இருந்து வாங்கிக்கிறேன் .

நீங்க அத்தனை எடுத்துட்டு போகலாம் என்று சொன்னபோது செல்வாவிற்கு இறக்கை முளைத்து பறப்பது போல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *