செய்திகள்

திருட்டுப்போன நாகப்பட்டினம் கோவில் சிலை நெதர்லாந்து நாட்டில் கண்டுபிடிப்பு

Makkal Kural Official

சென்னை, மே.7-

15 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன நாகப்பட்டினம் அக்னீஸ்வரர் கோவில் சிலை நெதர்லாந்து நாட்டில் இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது. அந்த சிலையை மீட்கும் முயற்சியில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகழூர் அக்னீஸ்வரர் கோவிலில் தொன்மைவாய்ந்த கண்ணப்பநாயனார் உலோகச்சிலை கடந்த 2010-ம் ஆண்டு திருட்டுப்போனது. இந்த சிலை திருட்டு தொடர்பாக திட்டச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எனினும் மாயமான சிலையை மீட்க முடியவில்லை. இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல் போன்று ஆனது.

தமிழக போலீஸ்துறையில் தகவல் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட பின்னர், கோவில்களில் மாயமான சிலைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யபட்டது. இதில் திருட்டுப்போன கண்ணப்பநாயனார் உலோகச்சிலையும், உருவமும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த சிலை வெளிநாடு களில் உள்ள அருங்காட்சியகங்களில் இருக்கிறதா? என்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. திருட்டுப்போன கண்ணப்பநாயனார் உலோகச்சிலை நெதர்லாந்து நாட்டில் மாண்ட்ரீலில் உள்ள ஐரோப்பிய நுண்கலை கண்காட்சியில் ஏலமிடுவதற்கு வைக்கப்பட்டிருக்கும் தகவல் அப்போதைய தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பிரவேஷ்குமாருக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர், நெதர்லாந்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும் இ-மெயில் மூலம் அவசர கடிதம் அனுப்பினார்.

இதன் மூலம் இந்த சிலை ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், இந்த சிலை நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை நெதர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

தக்க நேரத்தில் ஏலத்தை தடுத்து, கண்ணப்பநாயனார் உலோகச்சிலையை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள தமிழக சிலை கடத்தல் தடுப்பு கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக், முன்னாள் ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், பாலமுருகன், கும்பகோணம் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோருக்கு போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *