” டேய் முனியா…எதிர்த்தாப்பில இருக்கிற அந்த வீட்டை நல்லா பார்த்துக்கோ.அதுல தான் நாம நாளைக்கு நடுஜாமத்துல வந்து திருடப்போறம். வாசல்ல நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்குதுகளே ரெண்டு பெரிசுக… அதிக இன்னிக்கு நைட் காசிக்கு போகுதுக. ரெண்டு பேர் மேலயும் ஒரு கண் வச்சிக்க என்ன.. சரி, அதுக நம்மல பார்க்கிற மாதிரி தெரியுது. திரும்பி பார்க்காம நட” என்றான் கபாலி.
தன் வீட்டை நோட்டமிட்ட வழிப்போக்கர்கள் இருவர் மீதும் சந்தேகம் வந்தது பெரியவர் வேதாச்சலத்துக்கு.
ஏதோ யோசித்தவர் எழுந்தார்.
வீட்டினுள் சென்று வந்தார். மனைவியிடம் சொல்லிவிட்டு பக்கத்து தெரு முனையில் இருக்கும் ஒரு கடைக்குச் சென்றார்.
மாலை.
பெரியவரும் மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு காசிக்கு புறப்பட்டு சென்றார்கள்.
அந்த வார இறுதியில் வீடு திரும்பினா்கள் இருவரும்.
வீட்டினுள் நுழைந்த பெரியவருக்கு இப்போது திருப்தி.’அப்பாடா!பொருள்கள் எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே இருக்கு. திருடனுக யாரும் வரலை.’ சந்தோஷப்பட்டார்.
மாலை.
பக்கத்து தெரு முனையிலுள்ள ‘ அந்த’ கடையை தேடி போனார் பெரியவர்.
கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையுமளவிற்கு துளை போடப்பட்டிருக்க, கடையின் போர்டு காணாமல் போயிருக்க, கதவுகள் பூட்டப்படாமல் உள்ளே எட்டிப்பார்பவர்களை ஆவலாக வரவேற்றது வெற்றிடம்.
அதிர்ந்தார் பெரியவர்.
அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு ஓடினார்.
” ஏங்க இங்கிருந்த சேட்டோட அடகுக் கடை எங்கேங்க?”
” ஓ…அதுவா…நாலு நாட்களுக்கு முன்ன சில திருட்டுப் பசங்க வந்து நைட்ல
செவுத்துல ஓட்டைய போட்டு உள்ளாற பூந்து சேட்டு வச்சிருந்த எல்லா நகையையும் அல்லாக்கா அள்ளிக்கினு பூட்டானுக. ஏன் சார் நீ ஏதாவது நகய சேட்டுகிட்ட இட்டாந்து வச்சிக்கினியா?”
” அய்யோ… கடவுளே! வீட்ல பாதுகாப்பு இல்லேனு திருடனுகளுக்கு பயந்து இங்கே பத்திரமா இருக்கட்டும்னு நம்பி இந்த சேட்டு கடைல கொண்டு வந்து இருபது பவுன் நகைகளை அடகு வச்சிட்டு காசிக்கு போய்ட்டு வந்தேனே… என் புத்தியை…!”
பெரியவர் வேதாச்சலம் மெல்ல மெல்ல நொறுங்க ஆரம்பித்தார்.