அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, கனிமொழி நேரில் ஆய்வு
சென்னை, ஜன.19–
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–
திருச்செந்தூர் முருகன் கோயிலை ஒட்டி இருக்கக்கூடிய கடற்கரையானது தொடர்ந்து காலநிலை மாற்றத்தினால் கடல் அரிப்புக்கு உள்ளாகி கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடற்கரை பகுதியில் கூட முடியாத சூழல் இருப்பதையும், கடல் அரிப்பினால் அச்சுறுத்தல் மற்றும் கரை குறைந்து கொண்டே வரக்கூடிய சூழலை இன்று ஆய்வு செய்தோம்.
இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வை உருவாக்கி தரவேண்டும் என்ற வகையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள இத்திருக்கோயிலின் குடமுழுக்கிற்கு முன்பாக அதற்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கும், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்களை கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசித்து தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று கடல் அரிப்பை தடுப்பதற்கான நிரந்தர தீர்வை முதலமைச்சர் அறிவிப்பார்.
உலகம் முழுவதும் மண் அரிப்பு…
கரை ஒதுங்கிய சிற்பங்கள் வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களாக இருந்தால் நிச்சயமாக அவற்றை பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கடல் அரிப்பு என்பது தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் மண் அரிப்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டிருக்க கூடிய பிரச்சனைதான்.
இதற்கு எல்லா இடங்களிலும் தீர்வினை எந்த அரசாலும் உருவாக்க முடியாது. மிக அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நீண்ட கால தீர்வுகளுக்காக தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசு போல காலநிலை மாற்றத்தையும் அதனால் வரக்கூடிய விளைவுகளையும் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய ஆட்சி வேற எதுவும் இருக்க முடியாது. திருச்செந்தூர் புறவழிச் சாலை பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு குடமுழுக்கிற்கு முன்பாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது சுற்றுலா துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத், மேயர் பி.ஜெகன், திருக்கோயில் இணை ஆணையர் எஸ். ஞானசேகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.