செய்திகள்

திருச்சி மணிகண்டத்தில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மக்கள் அஞ்சலி

திருச்சி, நவ.8–

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் கிராமத்தில் விவசாயி பழனியாண்டி என்பவரது(செவலை) ஜல்லிக்கட்டு காளை உடல் நல குறைவால் உயிரிழந்தது. காளைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி மணிகண்டத்தை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 50). விவசாயியான இவர் சிறுவயதில் இருந்தே மாடுபிடி வீரராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி அதற்கு செவலைக்க்காளை என்று பெயரிட்டு அன்பாக வளர்த்து வந்தார். அந்த காளை, புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு, தென்னலூர், சூரியூர் உள்பட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கு பெற்று மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்பட பரிசுளை பெற்று உள்ளது. கடைசியாக நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டில் களம் இறங்கி அடக்க முடியாத காளையாக பரிசு பெற்றது. இந்த காளையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர் ரூ. 15 லட்சத்திற்கு கேட்டார். ஆனால் காளையின் உரிமையாளர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.அலங்காநல்லூர், தென்னலூர், பாலமேடு, சூரியூர், போன்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு அதிக அளவில் பரிசுகளையும் பெயர்களையும் பெற்றுச் சென்ற இந்த காளை உயிரிழந்தது ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செவளக் காளைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த காளைக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்தும் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தது. இதைபார்த்த காளையின் உரிமையாளர் பழனியாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் காளையை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வந்து அந்த காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த காளை தாரை, தப்பட்டை, வாண வேடிக்கைகள் முழங்க, பழனியாண்டி வீட்டின் அருகே பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழிதோண்டி அதில் காளையை அடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *