செய்திகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

திருச்சி, ஏப்.11-

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் தெரிவித்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்பு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் இளநிலை பாடங்களில் தலா ஒரு பாடத்திற்கு ரூ.75-ல் இருந்து ரூ.125 ஆகவும், முதுநிலை பாடங்களில் தலா ஒரு பாடத்திற்கு ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆகவும் உயர்த்தப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை கண்டித்து தொடர்ச்சியாக பல்வேறு கட்சியினர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் திருச்சியில் நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றி அமைக்கப்பட்ட தேர்வு கட்டண விகிதங்கள் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில் ஒப்புதல் பெற்று இந்த மாத தேர்வில் இருந்து அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தோம். இந்நிலையில் தங்களது பொருளாதார நிலையை சுட்டிக்காட்டி, ஏற்றப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட கூடுதல் தேர்வு கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டண விவரங்கள் இந்த மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கு தொடரும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.