செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை: தப்பி ஓடிய சுரேஷை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர்

Spread the love

திருச்சி், அக்.9–

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தப்பி ஓடிய சுரேஷை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்து உள்ளனர்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின்புறமுள்ள சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்த காட்சி கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. கொள்ளையர்களை பிடிக்க அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கொள்ளை நடந்த மறுநாள் இரவு திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4¾ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகைகளில் இருந்த பார்கோடுகளை ஆய்வு செய்து அவை திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சி நகைக்கடையில் நடந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டது பிரபல கொள்ளையனான திருவாரூரை சேர்ந்த முருகன் என்பதும், முருகனின் அக்காள் மகன் சுரே‌‌ஷ், மணிகண்டன் உள்பட 8 பேர் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.

இதையடுத்து மணிகண்டன், முருகனின் உறவினரான கனகவள்ளி என்ற பெண் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் தப்பி ஓடிய சுரேசின் பொறுப்பில் தான் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட மீதி நகைகள் இருக்கும் என கருதும் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளையர்களை பிடிப்பதற்காக 7 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையில் ஒரு குழுவினர் பெங்களூரூக்கு விரைந்து உள்ளனர். சுரேஷூக்கு பெங்களூரில் ஒரு காதலி இருப்பதால் அவரை பார்ப்பதற்காக நிச்சயம் சுரேஷ் வரும்போது அவரை பிடித்து விடலாம் என்பது போலீசாரின் திட்டமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *