திருச்சி, மே 15–
திருச்சி டிஜஜி வருண் குமார் வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக, வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, திருச்சி டிஐஜி வருண்குமார் விசாரணைக்கு ஆஜரான நிலையில் சீமான் ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பினார்.
கடந்த முறை இனி முறையாக ஆஜராகுவேன் என சொல்லி தானே சென்றீர்கள் என சீமான் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து சீமான் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்ற நீதிபதி இதுதான் கடைசி வாய்ப்பு என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.